தக்காளி விக்கிற விலைக்கு : காய்கறி மாலை அணிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..?

தக்காளி  விக்கிற  விலைக்கு :  காய்கறி மாலை அணிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..?
Published on
Updated on
2 min read

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை எனவும், திமுக அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

அதன் படி தூத்துக்குடி மாவட்டம் எம்.ஜி.ஆர் பூங்கா எதிரே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் உரையாற்றிய சண்முகநாதன், முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மையால் எந்த திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை எனவும், மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது தகுதி அடிப்படையில் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை துணை கொறடா ரவி தலைமை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி பொருட்களை மாலையாக அணிந்து கொண்டு அதிமுக கட்சி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலைவாசி உயர்வுகளை குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் காய்கறிகளை மாலையாக அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதனை தொடருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், அதிமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் மக்களின் இன்னல்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். 

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் உரையாற்றிய சோமசுந்தரம், விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண ஏழை, எளிய மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com