சர்ச்சைக்குள்ளான பிஎஸ்பிபி பள்ளியின் நிறுவனரும், ஒய் ஜி மகேந்திரனின் தாயாருமான ராஜலட்சுமியின் கனவு வீணாகாது என
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆறுதல் கூறி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை கே.கே நகரில் இயங்கி வருகிறது பத்ம சேஷாத்ரி பால பவன் மேல்நிலைப்பள்ளி. இங்கு 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இணைய வழி வகுப்பிலும் ஆசிரியர் இடுப்பில் துண்டுடன் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் முன்னிலையில் தோன்றி ஆபாசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.
இது தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிஎஸ்பிபி பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டம் பிரிவு 12 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் முதற்கட்ட விசாரணையை அதிகாரிகள் நடத்தியபோது, குறிப்பிட்ட அந்த பள்ளி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சமூகத்தை சீர்கெடுக்கும் வகையில் அமைந்த ஆசிரியரின் செயல்பாட்டினை கிண்டலடித்தும், அப்பள்ளியின் டிரஸ்டியாக செயல்படும் ஒய்ஜி மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி ஆகியோரையும் மக்கள் விமர்சித்தும் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விதம் குறித்து வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பது, விரைவு விசாரணை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை ஆகியன
பெற்றோரின் நம்பிக்கையை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது Mrs. ஒய்.ஜி.பி (ராஜலட்சுமி பார்த்தசாரதி)அவர்களின் கனவு வீணாகாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.