அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு பெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தில் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அவரது நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் இல்லம் மற்றும் கோவை - திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருணின் இல்லம் ஆகிய 2 இடங்களிலும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்ற நிலையில், இரண்டு பைகளில் பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.