"மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துக" - அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

"மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துக" - அரசுக்கு உயர்நீதிமன்றம்  அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

கொடைக்கானல், ஊட்டி போன்ற   மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான  பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு,  நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டாஸ்மாக் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் அவர், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், நீலகிரி, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

நவம்பர் 15ம் தேதி முதல் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், டிசம்பர் 1ம் தேதி முதல் கன்னியாகுமரி, தேனி, தர்மபுரி மாவட்டங்களிலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மதுபான பாட்டில்கள் விற்பனை மூலம் 7 கோடியே 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், மலைவாச தலங்களுக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்கும்படி உத்தர்விட்டும் அமல்படுத்தப்படவில்லை எனவும், நீலகிரி செல்லும் வாகனங்கள் முறையாக சோதிக்கப்படுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  சோதனைக்கு வாகனங்களை நிறுத்தும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வார விடுமுறை நாட்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாச தலங்களுக்கு செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது... உள்ளூர் மக்கள் அவசர மருத்துவ தேவைக்காக  வர முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், வட மாநிலங்களில் உள்ள மலைவாச தலங்களுக்கு வாகனங்கள் அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது... அதைப் போல தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், ஊட்டி மலைப்பாதையில் உள்ள பிளாஸ்டிக் சேகரிப்பு மையத்தில் பணியாளர் நியமிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com