ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயி மீது வருவாய் துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர், முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதலுக்காக வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பூபதிக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தள்ளு முள்ளாக மாறியதாக தெரிகிறது.
இந்நிலையில் திருவரங்கம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் காக்கூர் கிராம வருவாய் ஆய்வாளர் பழனி ஆகியோர் பூபதியை சரமாரியாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். காயமடைந்த பூபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனு கொடுக்க வந்த விவசாயியை அதிகாரிகளே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.