ஆளுங்கட்சி என்பது கொதிக்கிற பானை...முன்னாள் அமைச்சர் சொல்ல வந்தது என்ன?

ஆளுங்கட்சி என்பது கொதிக்கிற பானை...முன்னாள் அமைச்சர் சொல்ல வந்தது என்ன?

எதிர்க்கட்சித்தலைவர் அறிக்கைகளை ஏளனம் செய்யக்கூடாது- ஆளுங்கட்சி என்பது கொதிக்கிற பானை அதை பக்குவப்படுத்துவது தான் எதிர்க்கட்சி வேலை என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

 இந்தியக் கொடிகளை வழங்கினார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்தியக் கொடிகளையும் வழங்கியதோடு, இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர்.

போதைப்பொருள் பயன்பாடுகளிலிருந்து காக்க வேண்டும்

தொடர்ந்து இந்திய கொடியை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்திய நாட்டை வல்லரசாக்க உழைத்து கொண்டுள்ளார் பிரதமர்.ஆன்லைன் ரம்மி மற்றும் போதைப்பொருள் பயன்பாடுகளில் இருந்து இளைய தலைமுறையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள போதைப்பொருட்களை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்.போதைபொருள் பயன்பாடு அதிகரிப்பால் தான் பல்வேறு சமூகவிரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி நாணயத்தின் இரு பக்கங்கள்

தமிழகத்தில் பட்டப்பகலில் வங்கியை கொள்ளையடிக்கும் சம்பவம் நடப்பதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு விமர்சனத்தை கடந்து தமிழ் நாட்டுக்காக தமிழக மக்களுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு சிறந்த தலைமையின் மொத்த வடிவமாக உள்ளார்.

நாணயத்தின் இருபக்கங்களாக ஆளுங்கட்சியாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும்.ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அந்த நாணயமே செல்லாது. ஆளுங்கட்சி என்பது கொதிக்கும் பானை. அதை பக்குவப்படுத்தி பதம் பார்ப்பது தான் எதிர்க்கட்சி வேலை. எதிர்க்கட்சிகளின் அறிக்கையை அமைச்சர்கள் உள்வாங்கி அதற்கு அரசு தீர்வு காண வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கைகளை ஏளனம் செய்வதா?

நிதியமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் எங்கள் குற்றச்சாட்டு மற்றும் அறிக்கையை உள்வாங்கி கொண்டு தீர்வு காண வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் குறைகளை சுட்டிக்காட்டும் போதும் ஏகத்தாளம் ஏகடியம் அதிகாரத்துடன் பேசுவது நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள் ஏகத்தாளம் ஏகடியம் மமதையுடன் பேசுவதை ஜனநாயகம் மன்னிக்காது.எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுகளை, அறிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எந்த்க் கேள்வியை முன்வைத்தாலும்,  மக்கள் எண்ணங்களை கேள்விகளாக வைத்தாலும் அந்த அறிக்கையை அரசு உள்வாங்கமால் தார்மீக உரிமையோடு குறைகளை சுட்டிக்காட்டும் போது அதை திமுக அமைச்சர்கள் ஏளனம் செய்வதை நாட்டு மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.