ஊதிய உயர்வுத் தொகையை வசூலிக்க இடைக்கால தடை!

ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதைச்  சுட்டிக்காட்டி  இதுவரை   வழங்கப்பட்ட உயர்வுத் தொகையை வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், புலிவலம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் நாடியம்மாள் என்பவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வை நிறுத்தும்படி திருவாரூர் வட்டார கல்வி அதிகாரி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை சுட்டிக்காட்டி,  இதுவரை பெற்ற ஊதிய உயர்வுத் தொகையை திரும்ப வசூலிக்கவும்  உத்தரவிடப்பட்டது.  இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தலைமை ஆசிரியர் நாடியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் ஆர்.அருணா, கே. பிச்சையம்மாள் ஆகியோரும் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்,  தலைமை ஆசிரியர்களிடம் இருந்து ஊதிய உயர்வுத் தொகையை திரும்ப வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.