தேவாங்கை பாதுகாக்க சரணாலயம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...

தமிழகத்தில் அரிய வகை வனவிலங்கான தேவாங்கை பாதுகாக்க திண்டுக்கல், திருச்சி, கரூர் பகுதிகளில் சரணாலயம் அமைக்கக் கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தேவாங்கை பாதுகாக்க சரணாலயம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...

மதுரையை சேர்ந்த புஷ்பவனம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் அரிய வகை விலங்கான தேவாங்கு கரூர், திண்டுக்கல்,திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் குறைவாக இருப்பதால் தேவாங்கு வனப்பகுதியில் வாழ முடியாமல் அழிந்து வரும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறை வகுத்துள்ள விதிமுறைகளின் வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க வேண்டும. எனவே தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தமிழகத்தில் தேவாங்கு அதிகம் உள்ள பகுதிகளில்  சரணாலயம் அமைக்க கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே அரிய வகை வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தேவாங்கு அதிகமுள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. கரூர் மாவட்ட வன அலுவலர் தரப்பில், கடவூர், அய்யலூர் பகுதிகளில் உள்ள தேவாங்கு கணக்கெடுப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com