சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கம்...! முதலமைச்சர் கண்டனம்...!!

சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கம்...! முதலமைச்சர் கண்டனம்...!!

சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டிவிட்டர் கணக்குகள் நேற்று இந்தியாவில் முடக்கப்பட்டன. 

இதனை கண்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,  "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். மேலும், "கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம், கழுத்தை நெரிப்பது அல்ல" என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் முடக்கத்தை விலக்கி, சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சென்னை பெருநகர காவல்துறை இவர்களின் டிவிட்டர் பக்கத்தை முடக்கியதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியினரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தங்கள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை என சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர் மகேஷ்வரி விளக்கம் அளித்துள்ளார்.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com