"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!

"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!
Published on
Updated on
2 min read

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் 'கேரள ஸ்டோரி' திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யக்கோரி  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படம் கேரளா ஸ்டோரி. கேரளத்தை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத செயல்களுக்கு ஈடுபடுத்தப் படுவதாக இத்திரைப்படம் சித்தரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இத்திரைப்படம் இசுலாமிய சமூகத்தினரிடையே கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மேலும் இதனை பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்தை தடை செய்யகோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இசுலாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக 'கேரள ஸ்டோரி' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கைக்கு பிறகும் 'கேரள ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்யாமல் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு கடந்த 9 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதாக கருத முடியவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் இந்துத்துவவாதிகளின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது.

'காஷ்மீர் பைல்ஸ்', 'புர்கா' படங்களைத் தொடர்ந்து தற்போது 'கேரள ஸ்டோரி' திரைப்படமும் குறிப்பிட்ட ஒரு மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் இழிவுப்படுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்க முடியாத கொடுமை" என வேதனையடைந்துள்ளார்.

மேலும், "உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. 

மதவெறுப்பை கடைபிடிக்கும் இந்துத்துவா அமைப்பினர், கிறித்துவ, இசுலாமிய நாடுகளோடு தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? உலகம் முழுவதும் சுற்றிவந்து ஒவ்வொரு கிறித்துவ, இசுலாமிய நாடாக ஓடோடிச் சென்று நட்பு பாராட்டும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் துணிச்சல் உண்டா? மோடி அரசு இசுலாமிய நாடுகளுக்கு மாட்டுக்கறியை ஏற்றமதிசெய்து, எரிபொருளை இறக்குமதி செய்வதை எதிர்த்து இத்தகைய மதவெறியர்கள் என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, "படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களின் பாதுகாப்பிற்கு பற்பல முற்போக்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ள 'ஷரியத்' சட்டத்தையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரித்த பிறகும் திமுக அரசு 'கேரள ஸ்டோரி' திரைப்படத்தை காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆள்வது திமுகவா? பாஜகவா? என்ற சந்தேகத்தை எழுப்புவதாக" கூறியுள்ளார்.

ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு 'கேரள ஸ்டோரி' திரைப்படத்தை தடைசெய்ய வேண்டுமென அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com