மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த தெற்கு விநாயககுடியை சேர்ந்தவர் சுரேஷ்-41. இவர் சீர்காழி அருகே புத்தூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சுரேஷை அடுத்தடுத்து காத்திருப்பு மற்றும் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கு பணிமாற்றம் செய்யபட்டும், அங்கு பணி வழங்கபடாமல் புதுப்பட்டினம் பகுதி டாஸ்மாக் கடைக்கு வாய்மொழி உத்தரவாக பணியாற்ற அதிகாரிகள் தெரிவித்தனராம்.
இதனால் மன வேதனையடைந்த சுரேஷ் மீண்டும் புத்தூர் டாஸ்மாக் கடையிலேயே பணி வழங்க வலியுறுத்தி, சேந்தங்குடி பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு அவரிடம் கீழே இறங்கி வரக் கூறி வலியுறுத்தினர். ஆனால், சுரேஷ் டவரில் இருந்து இறங்கி வராமல் போராட்டத்தை தொடர்ந்தார். இது குறித்து சீர்காழி காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்...!
சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டவரில் ஏறி போராட்டம் நடத்திய சுரேஷிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீர்காழி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து சுரேஷை பத்திரமாக கீழே இறக்க முயன்றனர்.
பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டு சுரேஷ் செல்போன் டவரில் இருந்து இறங்கி வந்தார். அவரை போலீசார் சீர்காழி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.