வாட்ஸ்அப் செய்திகளை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

வாட்ஸ்அப் செய்திகளை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தங்களுக்கென்று வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் இந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த நினைப்பவர்கள், தொடர்ந்து புதிய இளைஞர்களிடம் அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட மாதம்:

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ட்விட்டர் ஸ்பேசஸில் 'திராவிடத்தைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

திராவிட அரசு:

இதன் கடைசி நாளான நேற்று,‘திராவிட அரசு’என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். திராவிட அரசு பற்றி முதல்நாளில் என்னை பேச சொல்லாமல் கடைசி நாளில் பேச வைத்து விட்டார் டிஆர்பி ராஜா என்று ட்விட்டர் ஸ்பேசஸில் பேசியவர், தோனியை பிடிக்கும் என்பதற்காக என்னை பினிஷ் செய்ய வைத்து விட்டார் என்றும் கலகலப்பாக பேசியுள்ளார்

அவதூறுகள்:

அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, அரசியல் இயக்கம் மட்டுமல்ல - அறிவியக்கம் என தெரிவித்தவர், தங்களுக்கென்று வரலாறு இல்லாதவர்கள், கொள்கை இல்லாதவர்கள், இந்த மண்ணில் பிற்போக்குத்தனங்களை நிலைபெற செய்வது மூலமாக, தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவலாம் என்று நினைப்பவர்கள் என்று பலரும், பல ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருவதாக தெரிவித்தார். 

கருணாநிதி பதில்:

அவ்வாறு பரப்பும் அத்தனை அவதூறுகளுக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல முறை பதில் அளித்துள்ளார் என்றும், ஆனாலும் புதிதாக வரக்கூடிய இளைஞர்களுக்கு முதலிலேயே இந்தப் பொய்களை அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர்கள் தொடர்ந்து அந்த அவதூறுகளை பரப்புவதாகவும் முதலமைச்சர் சாடினார்.

வாட்ஸ்அப் செய்தி:

ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதனுடைய உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள இன்னொரு செய்தி வர வேண்டும் என்ற ஒரு அவல நிலை இன்றைக்கு வந்துவிட்டதாகவும், அந்தளவிற்கு பொய்களை பரப்புவதாகவும் கவலை தெரிவித்த முதலமைச்சர், எதையும் படிக்காமல் வாட்ஸ்அப் செய்திகளை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது என பேசியுள்ளார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை, சாதனைகளைப் பரப்பி, இணையதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.