புயல் எச்சரிக்கை: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

புயுல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி, நாளை மறுநாள் புயலாக உருவெடுக்கிறது. ’மிக்ஜாம்’ என பெயரிடப்படும் இப்புயல், இம்முறை சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என்றும், இதனால் கல்பாக்கம் துவங்கி வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், அதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு தொடர் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

அந்த ஆலோசனை கூட்டத்தில், புயல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com