“இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்....” துரை வைகோ!!

“இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்....” துரை வைகோ!!

Published on

சி.ஏ.ஏ, ஹிஜாப் என சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சமூகநீதி நிலைத்திட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி:

மதிமுக சிறுபான்மையினர் அணி சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோ பங்கேற்று நோன்பு திறந்தனர்.  இந்நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலான் மாத நோன்பை திறந்தனர்.

இஸ்லாம் என்றால்..:

இஸ்லாம் என்பதற்கு கீழ்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்று பொருள் எனவும் அல்லாவுக்கு அடிபணிந்து அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவது என பொருள் நிரம்பி உள்ளதால் இஸ்லாம் என பெயரிடப்பட்டுள்ளது எனவும் கலிமா, தொழுகை, நோன்பு உள்ளிட்ட 5 கடமைகளை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கிறார்கள் எனவும் துரை வைகோ கூறியுள்ளார்.

மேலும் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் உலகத்தின் சமநிலையை பேண உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அதனால்தான் இஸ்லாத்தில் சாதி இல்லை எனவும் ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை இல்லை எனவும் பொருளாதாரத்திலும் இஸ்லாம் சமநிலையை பேணுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் என்ற உணர்வால் :

தொடர்ந்து பேசிய துரை வைகோ, இன்றையை காலகட்டத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மதநல்லிணக்கம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு இனங்களை, சாதிகளை கொண்ட இந்தியாவில் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம் எனவும் பேசியுள்ளார்.  

ஜனநாயகத்தை நிலைநிறுத்த:

மேலும் வேற்றுமையில் ஒற்றுமை என்று உருவாக்கப்பட்ட இந்தியாவை, இந்தியா இந்துக்களுக்கே என இந்து ராஷ்டிரத்தை உருவாக்க ஒரு கூட்டம் முயல்கிறது எனவும் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகின்றனர் எனவும் கூறிய அவர் சி.ஏ.ஏ, ஹிஜாப் என சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் சமூகநீதி நிலைத்திட மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் எனவும் துரை வைகோ பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com