ஆபத்து என்றால் அல்வா சாப்பிடுவது போல..... அழிச்சாட்டியம் செய்யும் மாணவர்கள்..!

ஆபத்து என்றால் அல்வா சாப்பிடுவது போல.....  அழிச்சாட்டியம் செய்யும்   மாணவர்கள்..!


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியில் அரசுக் கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் நெடுந்தூரங்களில் இருந்தெல்லாம் சென்று பயின்று வருகின்றனர். 

அந்த வகையில் அணைக்கட்டு மாதனூர், மேலரசம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு பேருந்து பயணமே சிறந்த வழியாக அமைந்துள்ளது. ஆனால் அதில் பயணிக்கும் மாணவர்களுக்கோ ஆபத்து என்றால் அல்வா சாப்பிடுவது போலதான் தெரிந்துள்ளது. 

மிகவும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் வேறு வழியின்றி மாணவர்கள் தங்கள் உயிரோடு விளையாடி வருவதை நாள்தோறும் பார்க்க முடிகிறது. அரசுப் பேருந்துகளில் அடித்துப் பிடித்து ஏறும் மாணவர்கள் உள்ளே செல்லாமல் படியிலேயே நின்று வீரசாகசங்களில் ஈடுபடுகின்றனர். 

இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் மோசமான முடிவையே தரும் என உணர்ந்தும் சிறார்கள் விபரீத எண்ணத்தை கைவிட மறுக்கின்றனர். இதனை வேடிக்கை பார்க்கும் பெரியவர்கள் எவ்வளவோ அறிவுரை கூறியும் பயமறியாத இளங்கன்றுகள்  கேட்டபாடில்லை. 

குறைந்த எண்ணிக்கையில் ,மட்டுமே  பேருந்துகள்  விடப்படுவதால்தான் இப்படியான வீர-தீரச் செயல்களை செய்வதற்கு முடிகிறது என்றும், பள்ளி கல்லூரிகள் ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் மட்டும் கூடுதலாக பேருந்துகள் இயக்கினால் இதுபோன்ற காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பி நாள்தோறும் உயிரைக் கையில் பிடித்திருக்கும் பெற்றோரின் கோரிக்கை நிறைவேறுமா? ..... 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com