கர்நாடக அரசு மீது புகாரளிக்க தமிழ்நாடு அரசு திட்டம்...!

கர்நாடக அரசு மீது புகாரளிக்க தமிழ்நாடு அரசு திட்டம்...!

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழுக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு புகார் அளிக்க உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. எனினும், இந்த மாதத்திற்கான 37 புள்ளி 9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய  மழை பெய்யாததால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் நடைமுறைப்படுத்த வில்லை எனக்கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அப்போது, விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவை தண்ணீரை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com