மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.கஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமரும் சமூக நீதி காவலருமான வி.பி.சிங்கிற்கு, பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. 52 லட்சம் ரூபாய் செலவில், எட்டரை அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வி.பி. சிங், இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதமர் என்று புகழாரம் சூட்டினார். மேலும், வி.பி. சிங் மறையலாம், ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது என்றார்
இந்த விழாவில், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜய் சிங், அபய் சிங் மற்றும் அமைச்சர்கள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். மறைந்த வி.பி.சிங்கின் 15-வது ஆண்டு நினைவுநாளில் அவரது உருவச்சிலை சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.