140 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 138 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி....

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

140 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 138 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி....

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டு, வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அநேக இடங்களில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வசமாக்கியுள்ளன. எஞ்சிய செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இதேபோன்று, ஒன்றிய கவுன்சிலருக்கான பதவியிடங்களில் மொத்தமுள்ள 74 ஒன்றியங்களில் 73 ஒன்றியங்களை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின்படி மொத்தமுள்ள ஆயிரத்து 381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆயிரத்து பத்து இடங்களை வென்றுள்ளது. அதிமுக 216 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், தனித்து போட்டியிட்ட பாமக 46 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் முன்னிலை வகித்து மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அமமுக 5 இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும் வென்ற நிலையில், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்திலும் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.