"சீனர்களுடன் தொடர்பில் இருந்த இராஜேந்திர சோழன்" அகழாய்வில் தகவல்; அமைச்சர் பெருமிதம்! 

"சீனர்களுடன் தொடர்பில் இருந்த இராஜேந்திர சோழன்" அகழாய்வில் தகவல்; அமைச்சர் பெருமிதம்! 

இராஜேந்திரசோழன் சீனர்களுடன் வணிக ரீதியான தொடர்பில் இருந்ததாக, அகழாய்வில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தங்கம்  தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசின் இரண்டாவது தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் ராசராசசோழனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் ராசேந்திரனால் இந்நகரமானது சோழ நாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திரன் கங்கை வரை படை எடுத்து சென்று வெற்றி பெற்ற தனது  பயணத்தை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூரில் இருந்த தலைநகரத்தை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அமைத்தான். கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய முதலாம் ராஜேந்திரனின் ஆட்சியின்போது முடிகொண்ட சோழன் திருமாளிகை, கங்கைகொண்ட சோழன் மாளிகை, சோழ கேரளம் திருமாளிகை என்ற பெயரில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேடு என்ற  பகுதியில் கடந்த (2020 - 2022) அகழாய்வு மேற்கொண்டது. இதில் செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட  அகழ்வாரச்சி கடந்த ஏப்ரல் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் சீனாவுடன் சோழர்கள் கொண்டிருந்த வணிக தொடர்பை வெளிக்கொணரும் விதமாக சீன பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்கும் அச்சு மற்றும் முத்திரை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com