சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானதும் மீண்டும் கட்சித் தலைமை ஏற்பார் என தொண்டர்கள் உற்சாகத்தில் காத்திருந்தனர். ஆனால், சில நெருக்கடிகள் காரணமாக அரசியலிலிருந்து விலகியிருக்கப்போவதாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார் சசிகலா.
இதை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான பதவி சண்டையே அதிமுக தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் குற்றம் சாட்டினர். மேலும் எதிர்கட்சி தலைவர் பதவி விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் மோதல் வெடித்த நிலையில், சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோ அடுத்தடுத்து சமூக வலைதளத்தில் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என திட்டவட்டமாக தெரிவிக்க, அதே நிலைப்பாட்டுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி கே.சி.வீரமணி , சிவி சண்முகம் ஜெயக்குமார் ஆகியோர் சசிகலாவை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சசிகலா ஆடியோ குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஊமையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது 23 வது ஆடியோ உரையாடலை சசிகலா வெளியிட்டுள்ளார்.காரைக்குடியை சேர்ந்த பாஸ்கரன் என்ற அ.தி.மு.க தொண்டருடன் பேசும் சசிகலா, அதிமுக-வை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார்.அ.தி.மு.க.வை தனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.