குட்கா முறைகேடு வழக்கில்: அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசு!!

குட்கா முறைகேடு வழக்கில்: அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசு!!
Published on
Updated on
1 min read

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 11 ஆவது முறையாக  அவகாசம் வழங்கி உள்ளது சென்னை சிபிஐ நீதிமன்றம்.

தமிழ் நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 2021ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள்  டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக  கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த சூழ்நிலையில், தமிழக காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் சிபிஐ வழக்கில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிலருக்கு எதிராக விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை எனவும், திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை அளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காகவே இந்த வழக்கு 11 வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com