"தேசிய விளையாட்டு; மீண்டும் இதுபோன்று தவறு நடக்காது" உதயநிதி உறுதி!

"தேசிய விளையாட்டு; மீண்டும் இதுபோன்று தவறு நடக்காது" உதயநிதி உறுதி!

பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை அனுப்பாத தவறு இனி நடைபெறாது என அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள  அண்ணா சதுக்கத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும், 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட உள்ளதாக கூறினார். 

தொடர்ந்து, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, தீவிர விசாரணை செய்த பின்தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில், மகளிர் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேட்டியளித்தார். அப்போது மகளிர் காவலர் நலனில் திமுக அரசு என்றும் அக்கறை கொண்டிருக்கும் என தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் கூடம் மற்றும் புதிய உடற்பயிற்சி கூடத்தையும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்தார். 

இறுதியாக வீரர் வீராங்கனைகள் அமைச்சர்கள் முன்னிலையில் ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com