தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சரவையிலும் பட்டியல் இனத்தவருக்கு முக்கிய இலாக்காக்கள் வழங்கப் படவில்லை என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை அம்மன் குளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ர உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாநில முதலமைச்சரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு, திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால் அந்த சமூக நிதி சம நீதியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.
ஆனால், அவரது தலைமையிலான அமைச்சரவையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவியோ அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை. மாறாக கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
எனவே, திராவிட மாடல், வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்பட்டு வருவது இதன்மூலம் நிரூபணம் ஆகி உள்ளதாகவும் வானதி சீனிவாசன் சாடினார்..