அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், பொதுக் குழு தீர்மானங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும்" என்று தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிப்பதற்கு முன்பு தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனவே ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மட்டும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறிய நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: பாதாள சாக்கடை... விரிவான திட்ட அறிக்கை!!!