சிறுவனை கத்தியால் தாக்கிய ரவுடி கைது!

என்னை ஏன் முறைத்து பார்க்கிறாய் என்று கேட்டு, சிறுவனை கத்தியால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி ஒன்பதாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வாணி. இவருடைய மகன் 17 வயதான ஞானசேகரன். இவர், இரவு சுமார் 8 மணி அளவில் அதே பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார், அப்போது, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இன்பா என்கின்ற இன்பரசன், குடிபோதையில் அந்த பகுதியில் ரகளையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். 22 வயதான இன்பா மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் காவல்நிலையத்தில் உள்ளன. 

இந்த நிலையில், கையில் கத்தியை வைத்துக்கொண்டு சாலையில் செல்கின்றவர்களிடம்  அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதனை சிறுவன் ஞானசேகரன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், ஞானசேகரனை அழைத்த இன்பா, என்னை ஏன் முறைத்து பார்க்கிறாய் என கேட்டு, தான் வைத்திருந்த கத்தியை திருப்பி கைப்பிடியால் சிறுவனின் தலை மற்றும் முகத்தில் அடித்துள்ளார். இதில் சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்த, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவன் ஞானசேகரனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிறுவனின் குடும்பதார் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட போலீசார், ரவுடி இன்பா மீது வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com