”குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப்படுகொலைகள் என்பது ஈழப்பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பானது” சீமான்!!!

”குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப்படுகொலைகள் என்பது ஈழப்பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பானது” சீமான்!!!

குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? – சீமான் கண்டனம்

ஆவணப்படமும் கைதும்:

குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான, `இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ எனும் பி.பி.சி. ஊடகத்தின் ஆவணப்படத்தை சென்னை, அண்ணா நகர், அம்பேத்கர் சிலையின் கீழ் அமர்ந்துப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

பறிக்கப்பட்ட சுதந்திரம்:

தனிநபர் சுதந்திரத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரான திமுக அரசின் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாசிச பாஜக அரசையும், அதன் கொடுங்கோல் ஆட்சி முறையையும் எதிர்ப்பதாகக் கூறி, தமிழ்நாட்டில் வாக்கரசியல் செய்துகொண்டே, பாஜகவுக்கு ஆதரவான செயல்களைச் செய்து வரும் திமுக அரசின் தொடர் நடவடிக்கைகள் அப்பட்டமான மோசடித்தனமாகும்.

2002 படுகொலை:

2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்வைப் பதிவுசெய்து, அப்பேரவலத்தை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கும் பி.பி.சி. ஊடக நிறுவனத்தின் பணி மகத்தானது. அதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!  

மோடிக்கான பாராட்டு:

குஜராத்தை ஆண்ட பாஜக அரசின் துணையோடு, நிகழ்த்தப்பட்ட அப்படுகொலைகளில் அன்றைய முதல்வர் நரேந்திரமோடிக்கு இருக்கும் தொடர்பை விளக்கியதாலேயே, இப்படத்தை முடக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. பாஜக ஆளும் மாநிலங்களில் பி.பி.சி.யின் ஆவணப்படத்திற்குத் தடைவிதிக்கப் படுகிறதென்றால், அதன் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால், திமுக ஆளும் தமிழ்நாட்டில் ஆவணப்படத்தைப் பார்க்கவே கெடுபிடிகள் விதிக்கப்படுவதும், கைது நடவடிக்கைகள் பாய்ச்சப்படுவதுமான போக்குகள் பெரும் விந்தையாக இருக்கிறது. 

தடைக்கான காரணம்:

மாநில அரசு, பாஜக அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து, இத்தகைய தடைகளை விதிக்கிறதா? அல்லது குஜராத் படுகொலைகள் மீண்டும் பேசுபொருளானால், அப்படுகொலைகளை அரங்கேற்றிய நரேந்திரமோடி உள்ளிட்ட ஆட்சியாளர்களின் பக்கம் நின்று திமுக செய்த பச்சைத்துரோகம் அம்பலப்பட்டுவிடுமெனக் கருதிக்கொண்டு மூடி மறைக்க நினைக்கிறதா? என்பது புரியவில்லை. கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா, டெல்லி போன்ற மாநிலங்களில் குஜராத் படுகொலைகள் குறித்தான ஆவணப்படம் மக்களிடையே பொதுவெளியில் திரையிடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆவணப்படத்தை அலைபேசியில் பார்த்ததற்கே கைதுசெய்யப்படும் சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. 

ஈழப்படுகொலை:

கருத்துரிமை, சனநாயகம், மதச்சார்பின்மை என்றெல்லாம் பேசிவிட்டு, பாஜகவின் செயல்பாட்டோடு ஒத்துப்போகும் திமுக அரசின் நிர்வாக இயக்கம் பேராபத்தானதாகும். குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப்படுகொலைகள் என்பது ஈழப்பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பானது. ஈழப்படுகொலையின்போது அழித்தொழிக்கப்படும் தமிழ் மக்கள் பக்கம் நிற்காது, அழித்தொழிப்பு வேலைகளைச் செய்த ஆதிக்கவர்க்கத்தின் பக்கம் நின்ற திமுக, குஜராத் படுகொலைகளின்போது கொன்றொழிக்கப்பட்ட இசுலாமிய மக்களின் பக்கம் நிற்காது நரேந்திரமோடியின் பக்கம் நின்றது என்பது வரலாறு. 

மறுக்கவியலா உண்மை:

குஜராத் படுகொலைகளை அரசியலாக்க வேண்டாமென்றும், அது குஜராத் மாநிலத்தின் சிக்கலென்றும் கூறி, ஐயா கருணாநிதி அவர்கள் அநீதியின் பக்கம் நின்றதன் நீட்சியாகவே, ஐயா ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறதென்பது மறுக்கவியலா உண்மையாகும்.

கோரிக்கை:

ஆகவே, ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ எனும் குஜராத் படுகொலை குறித்தான பி.பி.சி. ஊடக நிறுவனத்தின் ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் விதிக்கப்படும் தடைகளைத் தளர்த்தி, அனுமதி வழங்க வேண்டுமெனவும், ஆவணப்படத்தைத் திரையிடும் சனநாயகவாதிகளுக்குக் காவல்துறையினர் மூலம் நெருக்கடிகள் கொடுக்கப்படும் போக்கைக் கைவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com