தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற உள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள், வருவாய் அதிகரிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகளை வழங்க இந்த திட்டக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. குழுவின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை, நில உபயோகம், ஊரக மேம்பாட்டுத்துறை, நலவாழ்வு மற்றும் சமூக நலத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து (ஓய்வு), சட்டமன்ற அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திருமதி மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.