சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் பிரம்பால் அடித்து, காலால் உதைத்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வபாண்டி, சிதம்பரம் ஆதிதிராவிட aநலத்துறை தாசில்தார் சத்யன் ஆகியோர் இன்று பள்ளியில் அதிரடி விசாரணை நடத்தினர். பள்ளி வகுப்புக்கு வராத மாணவர்கள் சிலரை இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் தாக்கியதும், அதில் ஒரு மாணவரை பிரம்பாலாலும், காலாலும் தாக்கும்போது சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே ஆசிரியர் தாக்கியதால் காயடைந்ததாக கூறி 12 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் இன்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனிடம் அதிகாரிகள் குழுவினரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
அரசு பள்ளியில் படிக்கும் தனது மகன் ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவம் வேறு எந்த மாணவருக்கும் நிகழக்கூடாது என மாணவனின் தந்தை, கூறினார்.