மேலூர் அருகே 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என்றும் இதில் வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி மற்றும் மலம்பட்டி ஆகியவை 5 மாகாணங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மக்கள் சித்திரைப் பிறப்பை வெற்றிலைப் பிரித்திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி அம்பலகாரர்கள், இளங்கச்சிகள் என 44 பேர் வெள்ளலூர் கிராமத்தில் உள்ள கருங்கல், மந்தைக் கருப்பண சுவாமி கோவில் முன்பாக ஒன்று கூடி பூமியைத் தொட்டு வணங்கி அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி ஐந்து மாகாண அம்பலகாரர்களுக்கும் வெற்றிலைகளை பிரித்து கொடுத்து மரியாதை வழங்கப்பட்டது.
இதனைப்பெற்றுக் கொண்ட அம்பலகாரர்கள் 60 கிராம மக்களுக்கும் வெற்றிலையை பிரித்து வழங்கினர். இதை வாங்கிச் செல்லும் மக்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து, பின்னர் விவசாய நிலத்திற்கு கொண்டு சென்று வணங்கி வேளாண் பணிகளை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.. 500 ஆண்டு பாரம்பரியமிக்க வெற்றிலைப் பிரித் திருவிழாவால் மழை பொழிந்து,விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.