விமரிசையாக நடைபெற்று வரும் வைகாசி விசாகத் திருவிழா...!

விமரிசையாக நடைபெற்று வரும் வைகாசி விசாகத் திருவிழா...!

வைகாசி விசாகத்தையொட்டி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாத விசாக நட்சத்திர திருநாள், 'வைகாசி விசாக' திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, வடபழனி  என அனைத்து முருகன் கோவில்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகன் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : ”இசைஞானி” இளையராஜாவின் 80வது பிறந்த நாள்...நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!
 
இதில், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை யோட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. உச்சி கால அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளுக்கு பிறகு வசந்த மண்டபத்தில், தங்க சப்பரத்தில் எழுந்தருளும் ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேதராக ஜெயந்தி நாதர் வீதி உலா வருகிறார். வைகாசி விசாகத்தையொட்டி, தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். 

இதேபோல், முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு முருகப் பெருமான் தெய்வானை அம்மாளுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான விசாக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். வைகாசி விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com