அதிமுக-பாஜக மோதல் இல்லை...! அண்ணா குறித்த பேச்சில் தவறில்லை...! அண்ணாமலை அந்தர் பல்டி...!

Published on
Updated on
1 min read

அதிமுக-பாஜக கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அதிமுகவிற்கும் பாஜகவுக்கும் மோதல் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, தமிழகத்தில் தனது தலைமையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவைக் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார். 

இதற்கு அதிமுகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்த தவறான விமர்சனத்தை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். 

இரு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான ஜெயக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்கள் பலரும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பதிலுக்கு பாஜக நிர்வகிகளும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கேலிக் கூத்துகள் எல்லாம் அரங்கேறிய நிலையிலும், இது குறித்து அதிமுக தலைமையோ, பாஜக தேசியத் தலைமையோ வாய் திறக்கவில்லை. 

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், கூட்டணி முடிவுகளை பாஜக தேசியத் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.

அத்துடன், தனது தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது பதில் சொல்வது தனது உரிமை என்று கூறிய அண்ணாமலை, அறிஞர் அண்ணாவை தரக்குறைவாக விமர்சித்தது இல்லை என்றும் சரித்திரத்தில் உள்ளதை கூறினேன் என்றும்  கூறினார்.  

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே, தான் தலைவராக இருப்பதாக கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் 3-வது கட்சிக்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது என்று ஆக்ரோஷமாக கூறினார். 

இதனால், 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா...? அல்லது தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com