" ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள், குடும்ப அரசியலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள்”, என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்பதாக கூறினார். மேலும், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறவேண்டும் எனவும், தனிதனியே தேர்தல்கள் நடப்பதால் பல்வேறு பிரச்சனைகள் வருவதாகவும் அதனால் கொள்கை ரீதியாக முடிவெடுத்து செயல்படமுடியவில்லை என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வட கிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இராணுவ பாதுகாப்பு குறைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான நபர்கள் தேர்தல் நடத்த பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக, தமாகா போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்", என்றும் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பல நாடுகளில் உள்ளது என்றும், இதனால் அதிகாரிகள் மீதான சுமை குறைவதாகவும், இதனால் தேர்தல் செலவு குறையும் தெரிவித்தார். அதோடு, இது இந்தியாவின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, இந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள் என்றும், குடும்ப அரசியலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள் என்வும் விமர்சித்தார்.
தமிழ்நாட்டிற்கு எதுவும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என முதல்வர் பொய் சொல்லியுள்ளார் எனவும், 10 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்ததை 13 பக்க வெள்ளை அறிக்கை தந்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசு அதிக பணம் வந்த மாநிலம் தமிழகம் தான் எனவும், ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள் என்றூம் விமர்சித்தார். இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 சீட் ஜெயிப்போம் என உறுதியாக பேசினார்.
இதையும் படிக்க | தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு...!