நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா பகுதிகளில் 4 நபர்களை அடித்து கொன்ற புலி, 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்து கொன்றுள்ளது. T23 என அழைக்கப்படும் இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் உலா வரும் புலியை, 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், அதிரடிப் படையினர், வன உயரடுக்கு படையினர் என பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மசினகுடியில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் புலி நடந்து சென்றபோது, அதன் மீது கால்நடை மருத்துவ குழுவினர் 4 முறை மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதில் 2 மயக்க ஊசிகள் சரியாக பாய்ந்த நிலையிலும், T23 ஆட்கொல்லி புலி வனப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளது. மயக்க நிலையில் புதருக்குள் மறைந்து கொண்ட புலி, காலை நேரத்திற்குள் பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.