பிப்ரவரி 15 தான் இறுதி...எச்சரித்த செந்தில் பாலாஜி...!

பிப்ரவரி 15 தான் இறுதி...எச்சரித்த செந்தில் பாலாஜி...!
Published on
Updated on
1 min read

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆதார் எண் இணைப்பு:

சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்தது. அதற்கு காரணம், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு முகாம்:

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. எனவே,  இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு, அதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் சேர்ந்து வெளியிட்டது.

ஜனவரி வரை காலக்கெடு நீட்டிப்பு:

அதன்படி,  தமிழக அரசு நடத்தும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மின் இணைப்பு  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்னும் 1 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று தகவல் வெளியானது. 

இதனால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து அடுத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், ஜனவரி 31 க்கு மேல் கால நீட்டிப்பு செய்யப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். 

மீண்டும் காலநீட்டிப்பு :

இந்நிலையில், இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,  78 நாட்களில்  2 கோடி 42 லட்சம் மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 31 ஆம் தேதிக்கு மேல் காலநீட்டிப்பு செய்யப்படாது என்று கூறப்பட்ட நிலையில், மக்களின் வசதிக்காக பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின் கால நீட்டிப்பு என்பது கிடையாது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com