தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது-அமைச்சர் சேகர் பாபு!

தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது-அமைச்சர் சேகர் பாபு!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் போது பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தவிர்ப்பதற்கு 5000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,220 பேருக்கும் தீபாவளி பண்டிகைக்காக நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா வழங்கினர். பின்னர் சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும் மற்றும் பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றியதற்கு அமைச்சர் சேகர்பாபு பாராட்டுகளை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் உத்தரவிற்கு ஏற்ப சூரசம்காரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்விசிறி மின் விளக்குகள் மற்றும் குடிநீர் மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்கள் கூட சிலர் என்னை தொடர்பு கொண்டு திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

மழைநீர் வடிகால்

வரலாற்றில் இல்லாத வகையில் 1200 கிமி அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் இவ்வளவு பெரிய பணி ஓராண்டில் முடியும் தருவாயில் உள்ளது என கூறினார்.இன்னும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே பணிகள் நிலுவையில் உள்ளது. அதையும் முடிக்க தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. பெரு மழையால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு பால், உணவு தயார் நிலையில் உள்ளது. பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. 

கோவை கார் வெடிப்பு

மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜகவினர் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் 12 மணி நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, என்ஐஏ பாராட்டி உள்ளது. குற்றம் கண்டுபிடிப்பவர்களை இந்த அரசு கண்டு கொள்வதில்லை, இரும்பு கரம் கொண்டு தீவிரவாதம் அடக்கப்படும்  என்றார். திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் போது பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தவிர்ப்பதற்கு 5000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், சிறப்பு தரிசனம் ரத்து செய்து இலகு தரிசனம் உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது, பொது மக்கள் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.