திருவண்ணாமலையில் ஒரே நாளில் நிகழ்த்த சோகம்...! இடி மின்னல் தாக்கி இருவர் பலி....!

திருவண்ணாமலையில் ஒரே நாளில்  நிகழ்த்த சோகம்...! இடி  மின்னல் தாக்கி இருவர் பலி....!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சேர்ப்பாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாய்க்கிலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்  தினேஷ் ( வயது 26). இவர் தனது சொந்த விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது எதிர்பாராத விதமாக இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.  

மேலும் நிலத்திற்குச் சென்ற மகன் வரவில்லை என்று அவரது தந்தை வேலு நிலத்திற்கு சென்று பார்த்தபோது தினேஷ் நிலத்தில் கீழே விழுந்து இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சே.கூடலூர் அரசு மருத்துவமனைக்கு தினேஷ் தூக்கி சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்ததில் தினேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதேபோன்று தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி (வயது 50), என்பவரும்,  அதே கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த சமயம்,  இடி மின்னல் தாக்கியதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வானாபுரம் காவல் நிலைய போலீசார் இருவரின் சடலங்களையும்  கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களின் சடலங்களை  திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த இரண்டு கிராமங்களில் இடிதாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com