டி.டி.வி.தினகரன் என் நண்பன் தான், சின்னம்மா வந்த போது விருந்தெல்லாம் வைத்தேன்,.. கடம்பூர் ராஜு உருக்கம்.! 

டி.டி.வி.தினகரன் என் நண்பன் தான், சின்னம்மா வந்த போது விருந்தெல்லாம் வைத்தேன் என்று அதிமுக தொண்டரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும் ஆடியோ வெளிவந்துள்ளது.

டி.டி.வி.தினகரன் என் நண்பன் தான், சின்னம்மா வந்த போது விருந்தெல்லாம் வைத்தேன்,.. கடம்பூர் ராஜு உருக்கம்.! 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசென்றதும் அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கினர். அதன்பின் டி.டி.வி.தினகரன் அமமுக என்னும் கட்சியை ஆரம்பித்து கடந்த சட்டமன்ற  தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் சிறையிலிருந்து வெளிவந்த சசிகலாவும் தான் இனி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக்கொண்டு தற்போது ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவை பதறவைத்து வருகிறார். அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை சசிகலாவிடம் போனில் பேசிவருகின்றனர். இதன் காரணமாக சசிகலாவிடம் பேசிய அதிமுகவினர் 15 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமை அறிவித்தது. மேலும் சசிகலாவுக்கு எதிராக மாவட்டம் தோறும் தீர்மானங்களை நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில் அதிமுக தொண்டர் ஒருவர் கோவில்பட்டி எம்.எல்.ஏவான கடம்பூர் ராஜுவிடம் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ வைரல் ஆகி வருகிறது. சக்திவேல் ராஜன் என்னும் தொண்டர் கடம்பூர் ராஜுவிடம் நீங்கள் சின்னம்மாவுக்கு(சசிகலா) எதிராகபேசியதாக கூறப்படுகிறதே என்று கேட்கும் போது, நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை, அப்படி சொல்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது என்று கடம்பூர் ராஜு கூறுகிறார். 

மேலும் நான் சசிகலா பற்றியெல்லாம் பேசமாட்டேன் என்றும், நானும் தினகரனும் நண்பர்கள் தான் என்றும், அரசியல் சூழ்நிலை காரணமாக தினகரனும், நானும் எதிரெதிராக போட்டியிடும் சூழல் வந்துவிட்டதாகவும் கூறினார். அதன்பின் சசிகலா கோவில்பட்டி கோவிலுக்கு வந்தபோது அவரை தான் உபசரித்ததாகவும் கடம்பூர் ராஜு கூறினார். 

தொடர்ந்து பேசிய கடம்பூர் ராஜு, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என் கையில் இல்லை என்றும், அது தொடர்பாக கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.