இனியாவது நீட் தேர்வு தடை ரகசியத்தை உதயநிதி தெரிவிக்க வேண்டும்...ஈபிஎஸ் வலியுறுத்தல் !

இனியாவது நீட் தேர்வு தடை ரகசியத்தை உதயநிதி தெரிவிக்க வேண்டும்...ஈபிஎஸ் வலியுறுத்தல் !

அமைச்சராக ஆன பிறகாவது, நீட் தேர்வு ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

திமுகவின் ஆட்சியில் ஆதாயம் தேடுபவர்கள் அவர்களே :

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் ஆட்சியில் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும்,  போதைப்பொருள் கலாசாரத்தை திமுக அரசு குறைக்கத் தவறிவிட்டதாகவும், அதற்கு அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுவதாகவும் தெரிவித்தார். திமுகவின் ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் ஆதாயம் அடைந்து வருவதாகவும் கூறினார்.

இனியாவது தெரிவிக்க வேண்டும் :

தொடர்ந்து, திமுக ஆட்சியில் நீட் தேர்வால் 15 உயிர்கள் பறிபோனதற்கு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்று சாடிய அவர், நீட் தேர்வு தடை குறித்த ரகசியத்தை இனியாவது உதயநிதி தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பொய்வழக்கு போட்ட அதிகாரிகள் தப்ப முடியாது என்றும் குறிப்பிட்டார்.

150 திரைப்படங்கள் முடக்கம் :

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே தகவலை பலமுறை பதிவேற்றி கணக்கு காட்டுவதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, பொய் பேசுவதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என்றும் விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் 100 கோடி ரூபாய் கொடுத்து படம் ஒன்றை வாங்கியதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, சினிமாத் துறையில் திமுகவின் ஆதிக்கத்தால் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட 150 திரைப்படங்கள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com