காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனுமில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் மாலை முரசு நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாடார்களுக்கு சொந்தமான மெர்கண்டைல் வங்கியை மீட்பதற்கு முழு முயற்சியை மேற்கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தனார் என்றும் அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து அவரோடு பணியாற்றியதையும் வைகோ நினைவு கூர்ந்தார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது மதம் சார்ந்த முழக்கம் எழுப்பப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், விளையாட்டில் ஜாதி மதம் வரக்கூடாது என்றும் விளையாட்டில் ஜாதியும் மதமும் தலையிடக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், உலக யுத்தத்தின் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில் மாற்றுக் கட்சிகள் அதிமுகவோடு இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வேறு கட்சிகள் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்றும் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை குறித்து பேசிய வைகோ, தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் கர்நாடகா உடும்பு பிடியாக இருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இருக்காது என்று தெரிவித்தார். மேலும், கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று தான் இருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.