மீலாது நபியை முன்னிட்டு வைகோ வாழ்த்து!!

Published on
Updated on
1 min read

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீலாது நபியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இறைவனை வணங்கி மகிழ்வோம்; பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம்; எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்வோம் என சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் நபிகள் (ஸல்) பெருமானார் வற்புறுத்தி அறிவுறுத்தினார்கள். பசி உள்ளோருக்கு அன்னம் இடுங்கள்; நோயாளிகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரியுங்கள் என்று, மனிதநேயத்தைப் போதித்த மாண்பாளர் ஆவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "மதவெறியில், மது வெறியில் ஆழ்ந்து மனிதப் பண்பாடிழந்த மக்களைத் திருத்திட மார்க்கம் கண்ட அம்மனிதப் புனிதரின் வாழ்க்கை மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று திருக்குரான் போற்றும் சிறப்புடையது. அண்ணல் நபிகளின் (ஸல்) வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அறிவுரைகள் - வழிமுறைகள் - நம் சமுதாய அரசியல் பிணிகளைப் போக்கும் அருமருந்துகளாக விளங்கக் காணலாம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், " உத்தமத் திரு நபிகள் (ஸல்) நடத்திய சத்தியப் போராட்டங்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரியாய் அண்ணலை முன் நிறுத்தின. நேர்மையுடனும், தூய்மையுடனும் பெருமானார் வாழ்ந்த எளிய வாழ்க்கைக்கு இணை சொல்ல முடியாது" எனக் குறிப்பிட்டதுடன் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்ற மனிதர் தற்கால உலகிற்கு சர்வாதிகாரியாக வருவாரேயானால், சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதில் வெற்றி பெற்று உலகிற்கு சமாதானத்தையும், சாந்தியையும் நிலைநாட்டுவார்கள் என்று நம்புகிறேன் என பேரறிஞர் பெர்னாட்ஷா கூறினார்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகெங்கும் வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நாளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகளைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என வாழ்த்துக்கள் தெரிவித்தவுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com