ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெற்றோர் மறுக்கும்போது யாரை நம்புவது? வைரமுத்துவின் மகன் டுவீட்!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெற்றோர் மறுக்கும்போது யாரை நம்புவது? வைரமுத்துவின் மகன் டுவீட்!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை யார் வைத்தாலும், தான் தனது தந்தையே நம்புவேன் என வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து சினிமா துறையில் பிரபலமடைந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவர்  மீது பாடகி சின்மயி பாலியல் பலாத்கார புகார் அளித்தார். மீ டூ இயக்கம் மூலம் அவர் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த பிரச்சனை சிறிது நாட்கள் தணிந்திருந்த நிலையில், தற்போது அவருக்கு கேரளா அரசு அம்மாநிலத்தின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி. விருதினை  அறிவித்தது. இதற்கு, மலையாள நடிகை பார்வதி, பாடகி சின்மையி, கவிஞர் தாமரை உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால் அவருக்கு இந்த விருதை வழங்கக் கூடாது என ஒரு தரப்பினரும், வைரமுத்துக்கு இந்த விருதினை அறிவித்தது தமிழுக்கு கிடைத்த பெருமை எனவும் மற்றொரு சாரரும் தெரிவித்தனர். இதனிடையே வைரமுத்துவுக்கு எதிராக தொடர் பாலியல் சர்ச்சை எழுந்ததை அடுத்து, அவருக்கு  விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் அறிவித்தது. ஆனால் சர்ச்சைகள் காரணமாக ஓஎன்வி விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாக வைரமுத்து அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,  வைரமுத்துவின் மகனும் கவிஞருமான மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில்,  சிலர் உங்கள் தந்தையையும் தாயையும் வெறுத்து,  அவர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும்போது, உங்கள் பெற்றோர் அதனை மறுக்கும்போது நீங்கள் யாரை நம்புவீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ”நான் எனது தந்தையை நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள மதன் கார்க்கி, தங்கள் பக்கம் உண்மை உள்ளதாக குற்றம்சாட்டுபவர்கள் நம்பினால், அதை அவர்கள்  சட்ட அதிகாரிகளிடம் எடுத்து செல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.