சென்னையில் இன்று விநாயகா் சிலைகள் ஊா்வலம்...பாதுகாப்புப் பணியில் 26 ஆயிரம் போலீசார்!

Published on
Updated on
1 min read

சென்னையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் இன்று நடைபெறுவதால், 26 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னை காவல்துறைக்குட்பட்ட பகுதியில் ஆயிரத்து 519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் 425 சிலைகளும், ஆவடி மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் 204 சிலைகளும் என மொத்தம் இரண்டாயிரத்து 148 சிலைகள் கடந்த 18-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட இருக்கின்றன. இந்த சிலைகளைக் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு , திருவொற்றியூா் ஆகிய 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 18 ஆயிரத்து 500 போலீசாரும், ஆவடி மாநகர காவல்துறை சாா்பில் 3 ஆயிரத்து 800 போலீசாரும், தாம்பரம் மாநகர காவல்துறை சாா்பில் 3 ஆயிரத்து 650 போலீசாரும் என மொத்தம் 25 ஆயிரத்து 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களில் மட்டும் கொண்டு வர வேண்டும் என சிலை வைத்த அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்கள், ராட்சத கிரேன்கள், படகுகள், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வழிபாட்டு இடங்கள், ஊா்வல பாதைகள், சிலைகளை கரைக்கும் இடங்கள் ஆகியப் பகுதிகளில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com