கல்லூரி தொடங்க எனது நிலத்தை தருகிறேன் – முன்னாள் அமைச்சர்! 

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

கல்லூரி தொடங்க எனது நிலத்தை தருகிறேன் – முன்னாள் அமைச்சர்! 

திண்டுக்கல் - நத்தம் இரு வழிச்சாலை மாநில நெடுஞ்சாலையாக இருந்து வந்தது. இதனை ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி இரு வழிச் சாலையாக விரிவாக்க பணிகளை செய்தது. தற்பொழுது பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே கன்னிகாபுரம் என்ற இடத்தில் தற்பொழுது சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நத்தம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களுக்கு தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி நத்தம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் மின்மயானம் அமைக்க வேண்டும் என்பன உட்பட 10 பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

சுங்கச்சாவடி அமைக்க நிலம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும். போராடியோ, வாதாடியோ சுங்கசாவடியை ரத்து செய்வேன்.   நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு தனது சொந்த நிலத்தை வழங்க தயாராக உள்ளதாகவும், அதேபோல் மின்மயானம் அமைப்பதற்கு ஆகக்கூடிய அனைத்து செலவுகளையும் தனது சட்டமன்ற நிதியிலிருந்து வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது சட்டமன்றத் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்து முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.