வி.பி.சிங் நினைவை போற்ற முழு உருவ சிலை...!! முதலமைச்சர் அறிவிப்பு...!!

வி.பி.சிங் நினைவை போற்ற முழு உருவ சிலை...!! முதலமைச்சர் அறிவிப்பு...!!

வி.பி.சிங் நினைவை போற்றவும், தமிழ் சமுதாயத்தின் நன்றியை தெரிவிக்கக் கூடிய வகையிலும் அவருக்கு சென்னையில் முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் சிலை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது, "உத்தரப்பிரதேச மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் தான் வி.பி.சிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும் அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்தில் காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் சர்வோதய சமாஜியத்தில் இணைந்தார்; பின் பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். அதற்காக தனது நிலங்களையே தானமாக வழங்கினார்" என புகழாரம் சூட்டினார்.

அவரது அரசியல் பயணத்தை பற்றி தொகுத்து கூறுகையில், "1969 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர், இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார். பின்நாளில் தேசிய முன்னணி கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார். அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை என்றார். அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்" என தெரிவித்த முதலமைச்சர் வி.பி.சிங்கை சமூக நீதியின் காவலர் போற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின பழங்குடியினருக்கு மத்திய அரசு பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்" ஆகும் என்றார். 

மேலும்,சமூகரீதியாகவும் - கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல் படுத்திய சமூகநீதிக் காவலர் என்றார். மேலும், அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும் அவர்களுக்காக வாழ்ந்து காட்டியவர் என கூறினார்.

மேலும் மண்டல் ஆணைய காலகட்ட நிகழ்வுகளை நினைவு கூறும்போது, "மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, 'முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது' என்று அமைச்சர் ஒருவரே சொன்ன போது, 'இதோ... இப்போதே  தேதியைச் சொல்கிறேன்' என்று கூறிய கம்பீரத்துக்குச் சொந்தக்காரர். பின்நாளில் அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது என்றார். மேலும், சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் சுயமரியாதைச் சுடரொளி. வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள் என்று சொல்லியவர்" என்று கூறினார்.

மேலும் அவரது சாதனைகளை விளக்கி கூறும்போது, "வி.பி.சிங் பிரதமர் பதவியில் இருந்த பதினோறு மாத காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக தொடக்கப்புள்ளி, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான தொடக்கப்புள்ளி, வேலை பெறும் உரிமையை அரசியல் சாசன உரிமையாக ஆக்கியது, தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், தேசிய பாதுகாப்புக் குழு,விவசாயிகள் பிரச்னையை தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை( MRP) அச்சிட அறிவிப்பு, நுகர்வோர் பாதுகாப்பு "ஆகியவை அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர் என தெரிவித்தார்.

எனவே,வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் தமிழ் சமுதாயத்தின் நன்றியை தெரிவிக்கக் கூடிய வகையில் சென்னையில் முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com