நீட் தோல்வி தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளுவதற்கு முற்றுப்புள்ளி எப்போது?

நீட் தோல்வி தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளுவதற்கு  முற்றுப்புள்ளி எப்போது?

நீட் தேர்வால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது? என்று அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, “சென்னை, குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன். 2021இல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் ஜெகதீஸ்வரன். இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவிய காரணத்தால் 12.08.2023 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சூழலில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ஜெகதீஸ்வரனுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அப்போது நள்ளிரவு வரை உறவினர்களுடன் இருந்த செல்வசேகர்,  மகன் இறந்த மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மத்திய பாஜக அரசின் பிடிவாதமான எதேச்சதிகாரப் போக்கால் தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தில் மாணவரும், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்த பட்டதிலிருந்து, 2017 இல் அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை ஏறத்தாழ 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டில் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலைகள்  என்னும் கொடூரச்சாவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப் போகிறோம்?

மறுபுறம் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இட மாட்டேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஆளுநர் ஆர்.என். ரவி கொக்கரித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த நாளில் குரோம்பேட்டை மாணவரும் அவருடைய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கல்வித்துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து ஏக போக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய அரசின் போக்கினால் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிர்களை இழக்க நேரிடுமோ? என்ற கவலை ஏற்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயம் காரணமாக உயிரைப் போக்கிக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகக் கூடாது. தற்கொலை என்பது தீர்வாகாது என்பதை மாணவச் செல்வங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்” எனவும் தனது அறிக்கையின் மூலம் வைகோ அறிவுரை வழங்கியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com