அதிமுகவின் ஒற்றைத் தலைமையா எடப்பாடி பழனிச்சாமி?

தமக்கு விசுவாசமாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்குவது என சசிகலா தீர்மானித்தார். அவ்வாறு தான் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமையா எடப்பாடி பழனிச்சாமி?

சில நாட்களாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்னும் முழக்கம் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி?

ஒரு சாதாரனத் தொண்டராக இணைந்து எவ்வாறு அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்தார்?

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த இவர் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை ஒரு தொண்டராக இணைத்துக் கொண்டார் பழனிச்சாமி. தனது செயல்பாட்டால் சேலம் மாவட்ட அதிமுகவில் முக்கிய இடத்திற்கு உயர்ந்தார். 1989ஆம் ஆண்டில் முதன்முறையாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவருக்கு கூடுதலாக பொதுப்பணித் துறையும் வழங்கப்பட்டது.

டிசம்பர் 05, 2016 அன்று அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.

அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என்ற சூழலில் அப்போதைய முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக மறுத்தார். இதனால் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை வெடித்தது.

முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி

இந்தச் சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து சிறை தண்டனையும் விதித்தது. இதனால் தமக்கு விசுவாசமாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்குவது என சசிகலா தீர்மானித்தார். அவ்வாறு தான் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சில நாட்களிலேயே சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையிலான உறவு முறிந்தது.  

தமிழ்நாட்டின் தொழில்வளமிக்க கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு அம்மண்டலத்தின் பெரும் செல்வந்தர்கள், தொழில்துறையினர் என அனைவரும் பின்புலமாக நிற்கின்றனர்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பாஜகவின் அரசியல் அழுத்தத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டல முதலாளிகளை தமது பின்புலமாக்கி சில நேரங்களில் பாஜகவுடன் முரண்பட்டார்.

பிறகு சர்வதேச முதலாளிகளையும் தனக்குச் சாதகமாக்கவும், தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை திரட்டவும் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து தொழில்துறையினரை சந்தித்தார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கென ஒரு அடித்தளத்தை உருவாக்கத் தவறிவிட்டார். பாஜகவின் ஆதரவுடன் சசிகலாவை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் அதே பாஜகவால் தற்போது கைவிடப்பட்டுள்ளார்.

 ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முன்பை விடவும் தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவை வலுவாகத் திரட்டியுள்ளார். வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவித்து வன்னியர்களிடமும் கணிசமான ஆதரவை பெற்றுள்ளார்.

தனிப்பெரும் பலத்துடன் பழனிச்சாமி

கொங்கு மண்டலத்தில் மொத்தம் 57 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றியைப் பெற்று அரசியலிலும் கட்சியிலும் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார் பழனிச்சாமி.

அதிமுகவின் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகளும், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கே தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

ஒருவேளை அதிமுக பொதுக்குழு நடைபெற்றால் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

- ஜோஸ்