சார்ஜ் போட்டுக்கொண்டே, போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

Published on

தஞ்சாவூரில் பெண் ஒருவர் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியபொழுது, எதிர்பாராதவிதமாக போன் வெடித்து உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தத நிலையில் தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வருகிறார்.

இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை  நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல கடைக்கு வந்த அவர், தனது வேலைகளை செய்துள்ளார். அப்பொழுது, செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது.

இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்துள்ளது. செல்போன் வெடித்ததில், கடை  தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை போராடி அணைத்துள்ளனர்.

இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com