நாட்டை வல்லரசாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும் - அண்ணாமலை

நாட்டை வல்லரசாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும் - அண்ணாமலை

இளைய தலைமுறையினர் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் வாழ்க்கையை தெரிந்து கொண்டு போற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

20,000 மாணவர்கள் தேசிய கொடி ஏந்தி சாதனை

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ACS மருத்துவக் கல்லூரியில், 75வது சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் 20 ஆயிரம் மாணவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தியும், செல்போனில் சுதந்திர தின செய்தியை பரிமாறியும் உலக சாதனை படைத்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இளைய தலைமுறையினர் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த தலைவர்களின் வாழ்வையும், தியாகத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். மகாகவி பாரதியார், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டாலும், அவரது பாடல்கள் சுதந்திர வேட்கையை தூண்டியதாக அவர் தெரிவித்தார்.

நாட்டை வல்லரசாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்

தற்போது நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டும் எனவும், அதற்காக இளைஞர்கள் பாடுபட வேண்டும் எனவும் கூறிய அண்ணாமலை, மருத்துவ மாணவர்கள் படிப்பு முடிந்த பின்னர் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் அனைவரையும் சமமாக கருத வேண்டும், சேவையின் மூலம் நாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com