2 செயற்கை கோள்களும் செயலிழந்து விட்டன.. இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

2 செயற்கை கோள்களும் செயலிழந்து விட்டன.. இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இஸ்ரோவின் புதிய வகை ராக்கெட்டான எஸ். எஸ்.எல்.வி. இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், ராக்கெட் சுமந்து சென்ற இரண்டு செயற்கைகோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

குறைந்த எடைகொண்ட செயற்கைகோள்களை சுமந்து செல்லும் எஸ். எஸ்.எல்.வி

500 கிலோ வரை குறைந்த எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக, எஸ். எஸ்.எல்.வி. என்ற புதிய வகை ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. எஸ். எஸ்.எல்.வி. - டி1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் மூலம், புவி கண்காணிப்பிற்கான இ.ஒ. எஸ் - 02 என்ற செயற்கை கோள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அசாதி சாட் செயற்கைகோள் ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்திய இஸ்ரோ

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட நிலைகளை, வெற்றிகரமாக கடந்த நிலையில், இறுதி கட்டத்தில் சிக்னல் கிடைக்காமல் போனது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட்டின் இறுதிகட்ட செயல்பாடு குறித்து பகுப்பாய்வு நடைபெற்று வருவதாகவும், மீண்டும் தகவல் தொடர்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இரண்டு செயற்கைகோள்களும் செயலிழந்து விட்டன

இந்நிலையில் இரண்டு செயற்கைகோள்களும் கட்டுபாட்டை இழந்து விட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், புவியிலிருந்து 356  கிலோமீட்டர் வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவதற்கு பதிலாக, நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முயற்சித்த போது செயலிழந்து விட்டதாகவும் கூறியுள்ளது.  விரைவில் எஸ் எஸ்எல்வி-டி2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.