“எங்கள் செல்போன்கள் உளவுபார்க்கப்படுகின்றன” - எதிர்கட்சிகள் புகார், மத்திய அமைச்சர் விளக்கம்

“எங்கள் செல்போன்கள் உளவுபார்க்கப்படுகின்றன”  - எதிர்கட்சிகள் புகார், மத்திய அமைச்சர் விளக்கம்

எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு மத்தியில், அரசு ஆதரவு ஹேக்கர்களுக்கும் தங்களது எச்சரிக்கை குறுஞ்செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஐஃபோன் நிறுவனம் பதிலளித்துள்ளது.

ஹேக்கர்களின் தாக்குதல் முயற்சிக்கு ஆளானதாக, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், TMC எம்.பி மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா, சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ், CPM-ன் சீதாராம் யெச்சூரி  உள்ளிட்டோருக்கு ஐஃபோன் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது. அரசு ஆதரவுடன் தொலைதூரத்தில் இருந்து ஹேக் செய்யப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததாகத்தெரிகிறது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சொந்த நாட்டிலேயே உளவுபார்க்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. அதானியை விட்டுவிட்டு, கிரிமினல்கள் போல் எதிர்கட்சியினரை உளவுபார்ப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,  தெளிவற்ற கண்காணிப்பு குறுஞ்செய்தியை எதிர்கட்சிகள் காரணமின்றி விமர்சிப்பதாக கூறினார். ஐஃபோன் எச்சரிக்கை தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இந்நிலையில் அரசு ஆதரவு ஹேக்கர்களுக்கும் தங்களது எச்சரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பெரும் பொருட்செலவில் அதிநவீன முறையில் ஹேக் முயற்சி நடந்துள்ளதாகவும் ஐஃபோன் விளக்கமளித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com